Leave  Ur comment:

​​​​

Total Visitors






 

   Like Us









​​ Copyright  @ Illanthalir.com

Medicinal Cooking - ரேவதி சங்கரன்:





அஷ்டாம்சக் கஞ்சி

தேவையானவை: கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு, கசகசா - கால் ஆழாக்கு, ஓமம் - ஒரு டீஸ்பூன்

.
செய்முறை: எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.


இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது. 

மருத்துவப் பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக் கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.

பூண்டு - மிளகுக் குழம்பு

தேவையானவை: உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்

மருத்துவப் பலன்கள்: பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும். நோய்த் தொற்றைத் தடுக்கும். பூண்டுக்கு, கொழுப்பைக் குறைக்கும் தன்மை உண்டு. 



தேங்காய்க் கஞ்சி

தேவையானவை: அரிசி - ஓர் ஆழாக்கு, உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி, கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப்.

செய்முறை: அரிசியை ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பை சிவக்க வறுக்கவும். கசகசாவைப் பொடி செய்துகொள்ளவும். பிரஷர் குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். ஊறிய அரிசியைத் தண்ணீரோடு அதில் சேர்த்து, வெயிட் போடாமல் கொதிக்கவைக்கவும். முக்கால் பாகம் வேகும்போது, வறுத்த உளுந்து சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். இதில் தேங்காய், பொடித்த கசகசா, பால் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு குழைய எடுக்கவும். தொட்டுக்கொள்ள சட்னி அல்லது மாவடு தண்ணீர் ஜோராக இருக்கும்.


மருத்துவப் பலன்கள்: மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து மூன்றும் சேர்ந்த, சரிநிகர் உணவு. எல்லோருக்குமே ஏற்றது என்றாலும், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


பிரண்டைத் துவையல்

தேவையானவை: நறுக்கிய இளசான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு, இளசான கறிவேப்பிலை - கைப்பிடி, நல்லெண்ணெய் - கால் குழிக்கரண்டி.

செய்முறை: இரும்புக்கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், பிரண்டையைப் போட்டு, நன்றாக வதக்கவும். எண்ணெயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாகப் போட்டு, சிவப்பாகும் வரை வறுக்கவும். அதிலேயே, மீண்டும் பிரண்டையைப் போட்டு, அம்மியில் மசிய அரைக்கவும். சூடான சாதத்தில், துவையலைப் போட்டுக் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.


குறிப்பு: பிரண்டை நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும். முற்றலாக இருந்தால் நாக்கு அரிக்கும். சக்கை சக்கையாக இருக்கும்.

மருத்துவப் பலன்கள்: எலும்பு முறிவு வைத்தியத்துக்கு, பிரண்டை நல்லது. மூலநோய், ஆஸ்துமா, பசியின்மை, அஜீரணம், இருமல் பிரச்னை இருந்தால் பிரண்டையை சமையலில் சேர்க்கலாம்.


























இஞ்சிப் பூண்டு தொக்கு

தேவையானவை: தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள், உரித்த பூண்டு - தலா ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு உருண்டை, நல்லெண்ணெய் - அரை கிண்ணம், கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் இவை எல்லாவற்றையும் கல் உரலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இரும்புக் கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.


மருத்துவப் பலன்கள்: அன்னத்துவேஷம், பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார் களுக்குச் சிறந்தது.


சுக்கு மல்லி காபி

தேவையானவை: மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன், மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, கருப்பட்டி - தேவையான அளவு, துளசி - கைப்பிடி.

செய்முறை: எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 4 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்க்கவும். பிறகு இறக்கி, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.


மருத்துவப் பலன்கள்: உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். சளி வராமல் தடுக்கும். பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தலாம்.


கொள்ளு குழம்பு

தேவையானவை: கொள்ளு - அரை ஆழாக்கு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு, கொத்துமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: சின்ன வெங்காயம் - 2 கையளவு, தக்காளி - 4, பூண்டுப் பல் - 6.

செய்முறை: கொள்ளை முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைக்கவும். ஊறவைத்த கொள்ளை, நன்றாக வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதையும் போட்டுச் சுண்ட வதக்கவும்.


























இதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்க்கவும். அரைத்த கொள்ளு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கெட்டியாகும் வரை கொதித்ததும் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.

மருத்துவப் பலன்கள்: ஊளைச்சதை குறைய மாதம் இருமுறை கொள்ளுக்குழம்பு சாப்பிட்டுப்பாருங்கள். கொழுத்த உடம்பு குறையும்.





OUR SHOPPY SPL























OUR POPULAR LINKS






RECENT UPDATE








​​


​    @Shri online shopping

loading...













OUR LINKS

.  




LATEST DAILY RECIPES AND BEAUTY TIPS,VISIT

WWW.ILLANKATHIR.COM


LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM